"மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட முற்றுப்புள்ளி - மரணம்"
"சின்னக் கலைவாணர் " என்று மக்களால் கொண்டாடப்பட்ட கலைஞர் விவேக் சமீபத்தில் இயற்கை எய்தினார்.துக்கத்திற்கும் ,துயரத்திற்கும் அப்பாற்பட்டு இயற்கை தன் தினப்பணியை தொடர்ந்தது.எதிர்பாரா மரணம் இரு கேள்விகளை எப்பொழுதும் போல் வீசிவிட்டு சென்றது."எங்கிருந்து வந்தோம் ?" "எங்கே போகிறோம் ?".விடை இல்லாத இரு கேள்விகள் .
நா.முத்துக்குமாரின் "வேடிக்கைப் பார்ப்பவன் "போன்று ,உலகின் ஒவ்வொரு அசைவையும் நாம் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நம்மையும் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் நகர்கின்றனர்.எப்படி கண்ணுக்கு எட்டா விசை மூலம் பூமி 23 1/2°சாய்ந்து சுத்துகின்றதோ ,அதே போல தான் ,நம் நினைவுள்ள வரையில் நம் மனம் பல புரியாத புதிர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே விரிகிறது.
இறைவனடி சேர்ந்தார் என்பதும்,இயற்கையோடு கலந்தார் என்பதும்,நம் அறிவை கொண்டு நம் மனதை ஆசுவாசம் படுத்த கூறும் பதில்கள்."அப்படியென்றால் மனித வாழ்வே அர்த்தமற்றதா? சூன்யம் என்ற மறுப்புவாதம் தான் உலக தத்துவமோ ? " என்று என்னிடம் கேட்டால்,என் பதில் "இல்லை " என்பது தான்.
மரணம் என்பது மறுக்கப்படக்கூடாதது.அதே போன்று,தேடிச்செல்லக்கூடாததும்தான்.ஆதிகுடி தோன்றி மனிதன் பல்வேறு முரண்பட்ட வாதங்கள் மூலம் ,தன் செருக்கையும்,செல்வத்தையும் பெருக்கிக்கொண்டானே தவிர எதார்த்தம் என்ன என்று இன்னும் புரியாமல் திண்டாடுகிறான்.மரணம் பற்றி நெடிய கட்டுரை வரைய முடிந்த நமக்கு "உயிர்" என்பதை வரையறுக்கும் பக்குவம் இல்லை.குளோனிங் ,செயற்கை கரு என்ற அறிவியலின் நீட்சி ,"உயிர்க்கூறு" என்பதை விளக்கமுடியவில்லை.அதை விளக்க முடியாததால்தானோ என்னவோ இறைவன் இன்னும் பல வீடுகளில் படத்திலாவது சிரித்தபடி இருக்கிறார்.
"நாம் யார்?" என்று அனைவருமே ,விஞ்ஞானம் -மெய்ஞ்ஞானம் கொண்டு பார்த்தால் -இயற்கையின் திரிபு.பஞ்சபூதங்களின் உருமாற்றம்.நடுவில் அசைவிக்கும் ஜீவநாதம் தான் புரியாத விந்தை.மரணம் என்பது இந்த திரிபின் கூட்டு.புதிரான,புலப்படாத அந்த ஜீவநாதம் மட்டும் உலகில் கதிராய் உலா வருகிறது."Balance of energy " என்ற வரையறை படி உலகம் சமதளத்தில் இன்றளவும் இயங்குகிறது."ஜீவநாதம்" என்ற அந்த சக்தியின் தன்மை நம் வாழ்வியல் முறையே.
நல்லோரின் (Positive) ஜீவன் இருந்த போதும் சரி,இறந்த பின்னும் சரி தன் சக்தியின் மூலம் இயற்கையின் சமநிலையை நிலைநிறுத்தும்.இதுவே எதார்த்தம்,இயற்கை.வாழும் காலத்தே வாழ்த்தி வாழ்வோம்,வாழ்ந்த பின்னும் வாழவைத்தே விடைபெறுவோம்.மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட மரணத்தை வாதிடாமல் ஏற்றுக்கொள்வோம். ---சமர்ப்பணம் ---- சின்ன கலைவாணர் விவேக்கிற்கு..
![]() |
| Courtesy:Google |
